கடந்த 2016 – ம் தேர்தலில் வெற்றி பெற்றவர் கீதா. நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
மாறாக, கரூர் அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபாரிசின் பேரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா, கரூர் காந்திகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் இருந்து மிரட்டப்பட்டேன். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள்.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமிக்கு ஆதரவளித்து வாக்களித்தேன். இப்படி, என்னைப்போல் வாக்களித்த மகளிர் சட்டபேரவை உறுப்பினர்களுக்கு தற்போது சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மீண்டும் வழங்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
எதனால் எங்களுக்கு சீட் வழங்கப்படவில்லை?. அ.தி.மு.கவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மகளிர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் நான் இந்த கேள்வியை எழுப்புகிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எனக்கே, இந்த நிலைமை என்றால், அ.தி.மு.கவில் உள்ள சாதாரண தொண்டர்களுக்கு என்ன நிலைமை என்பதை தலைமை விளக்க வேண்டும்.