சென்னை திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தலைவராக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் எம்பிக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து, அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் எம்பியை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக ஜி.கே.மணி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அன்புமணியை கண்ணீர் மல்க கட்டித் தழுவி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.