கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
நித்தியானந்தா
குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார்.
பரமசிவனின் ஆசிகள், அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
நித்தியானந்தாவின் சிலை வழிபாடு
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இதற்கு நித்தி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில், கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே நித்யானந்தாவின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டு அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கைலாசா உரிய விளக்கம் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.