தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொலைதூர பேருந்துகளுக்கு புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால் அரசு பேருந்துகளை பயணிகள் அதிகம் நாடுவது தெரியவருகிறது.
நீண்டதூரம் செல்லக்கூடிய பயணிகள் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். பொதுவாக அரசு விரைவு பேருந்துகளில் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால் மக்கள் பயணம் செய்ய முன்வருவது இல்லை. தற்போது தனியார் பேருந்துகளுக்கு இணையாக சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் செயலாளர் கோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பயணிகள் மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக பயணம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பயணிகளை கவரும் வகையில் பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்கவும், இருக்கைகள், கண்ணாடி பஸ்சின் உட்பகுதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வெளியில் சென்று வந்த பேருந்துகளை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்யவும், பேருந்துகளுக்குள் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் போது ஏதாவது குறை இருந்தால் புகாராக தெரிவிக்கவும் வாட்ஸ்அப்எண் அனைத்து விரைவு பேருந்துகளிள் உட்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.