நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

15-வது சீசன் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நாளை முதல் மே 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவாக நடத்தப்படுகிறது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த முறை பாதி ஆட்டங்கள் இந்தியாவிலும், மீதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டன. ஆனால் இந்த முறை அனைத்து போட்டிகளும் உள்ளூரிலேயே நடத்தப்படவுள்ளன மும்பை மற்றும் புனேயில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசனில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது. இதனால் சென்னை அணிக்கு பதிலடி கொடுக்க கொல்கத்தா அணி தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் கொல்கத்தாவை வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க சென்னை அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணியையும் புதிய கேப்டன்கள் வழிநடத்துவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது.

By ADMIN