வீட்டைக் கலை நயத்துடன் பராமரிப்பது என்பதும் ஒருவகை தனித்திறமை என்றே கூறலாம். அதுவும் நம் கலைவண்ணத்திலேயே உருவானது என்றால், அதற்கு தனி பெருமை. நம் வீட்டை, நம் அறையை இப்படி அழகாக்கலாம், அப்படி அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் அதை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. சமீபத்திய ஊரடங்கு அந்த ஆசைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உங்கள் அறைகளை அலங்கரித்து கொள்ளுங்கள். குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றை பார்க்கலாம்.
பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நம் கிராமங்களில் வாழ்வது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாமே அதை உருவாக்க முடியும். மரம், பழுப்பு நிறம் போன்றவற்றை உபயோகித்தால் ஒரு பழமையான சூழல் கிடைக்கும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள் குச்சிகள். அவற்றின் மூலம் சுவரில் நமக்குப் பிடித்த வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
வெவ்வேறு அளவுகளில் குச்சிகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்து பெரிய குச்சி வரை ஒவ்வொன்றையும் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் இருந்து சிறிய குச்சிகள் வரை வரிசையாக ஒட்டிக்கொள்ள வேண்டும். தற்போது இரண்டையும் இணைத்தால் அழகான வடிவத்தை உருவாக்க முடியும். சுவரில் ஒட்டுவதற்கு முன்பு நாம் உருவாக்கிய வடிவத்தின் பின்புறத்தில் ஒரு குச்சியைக் கிடைமட்டமாக ஒட்ட வேண்டும்.
பொதுவாக வீட்டில் ஆணி அடிக்க வேண்டும் என்றாலே அனைவர் மனதிலும் தயக்கம்தான் ஏற்படும். ஆனால், ஆணி அடிப்பதிலும் ஒரு கலை இருக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அந்த வகையில், ஆணியின் மூலம் உருவாக்கக் கூடிய சுவர் அலங்காரம் இதோ…
தேவையான பொருட்கள்: ஆணி, கலர் நூல்கண்டு
ஆணிகளை உங்களுக்குத் தேவையான உருவத்தில் அடித்துக்கொள்ள வேண்டும். அதாவது, எழுத்துக்கள் வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்துகொண்டு ஆணி அடிப்பது நல்லது. பிறகு அனைத்து ஆணிகளையும் நூலால் கோர்த்தால், நீங்கள் விருப்பப்பட்ட வடிவம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு ஆணிகளாக, குறுக்கே நூலை கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நூல் பின்னல் போட்டது போன்ற அழகான தோற்றம் இதில் கிடைக்கும். இதை வீட்டின் படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும்.
எளிமையான ஒரு சுவர் அலங்காரம் தான் டாட்ஸ். தேவையில்லாத கலர் பேப்பர்கள், கிப்ட் ராப்பர்களை வைத்திருந்தால் போதும். இதனை உருவாக்கிவிடலாம். பேப்பர்களை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை எளிதில் தயார் செய்வதற்கு பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும் வெவ்வேறு அளவிலுமான வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின்பு, கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும். பின்பு கேன்வாஸை ப்ரேம் செய்து மாட்டினால் வேலை முடிந்தது. பேப்பர்களை ஒட்டும்போது நேர் கோட்டில் ஒட்ட வேண்டும். இங்கு உங்களுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக ஒட்டி , புதுப்புது உருவங்களை உருவாக்கலாம்.