தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியமைக்கவுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற சுற்றுப்பயணத்தில் ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் குறித்து தீர்வு காண்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்குவதே தன்னுடைய முதல் கையெழுத்தாக இருக்கும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்று தமது முதல் கையெழுத்து எதற்காக என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்க்கும் துறை ஒன்றை உருவாக்குவதாகவே இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்தப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.