தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என சினிமா பிரபலங்கள் ஆண்ட தமிழகத்தில் இம்முறை மொத்தமாய் சினிமாக்காரர்களை மொத்தமாய் ஓரங்கட்டியுள்ளனர் தமிழக மக்கள்.
தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து இதர கட்சிகள் களம் கண்டன.
அதேநேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சமத்துவ மக்கள் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சி தனித்து களம் கண்டது.
டிடிவி தினகரனின் அமமுக, தேமுதிக மற்றும் ஓவைசி கட்சியுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணையில் அமரப் போகிறது. அதேநேரத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் காலை முதலே முன்னிலை பின்னடைவு என மாறி மாறி இழுபறியில் இருந்து வந்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோருடன் கடுமையாக போராடினார். ஆனால் கடைசி நேரத்தில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதியிடம் தோற்றார் கமல்.
இதேபோல் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் நடிகை குஷ்பு. இதில் காலை முதலே பின்னடைவை சந்தித்து வந்த குஷ்பு திமுக வேட்பாளர் முகிலனிடம் படுதோல்வி அடைந்தார்.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகனும் படுதோல்வியை சந்தித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவிடம் வீழ்ந்தார் சினேகன்.
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மயில்சாமி வெறும் 60 வாக்குகளை மட்டுமே பெற்றார். விருகம்பாக்கம் தொகுதியில் நோட்டாவுக்கு 200க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் வெறும் 286 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கடந்த தேர்தல்களில் கருணாஸ், சரத்குமார் உள்ளிட்ட பல சினிமா நடிகர்கள் வெற்றிக்கண்ட நிலையில் இம்முறை சினிமாக்காரர்களை தமிழக மக்கள் ஓரங்கட்டியுள்ளனர்.