தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.
குட்டி தூக்கம்
அந்த தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது. ஆம் நீங்கள் சரியாகத் தான் படித்துள்ளீர்கள். பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.
மூளை ஆரோக்கியத்திற்கு பிற்பகல் தூக்கம்
இதுகுறித்து சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. இது குறித்த ஆய்வில், 60 வயதுடைய 2,214 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில், 1,534 பேர் பிற்பகல் தூக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர். மீதமுள்ள 680 பேர் பகலில் தூங்காமல் இருப்பவர்கள். அவர்களுக்கு அனைத்து விதமான உடல் சோதனைகளும், மினி மென்டல் ஸ்டேட் என்ற டெஸ்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினரும் இரவு நேரத்தில் சராசரியாக ஆறரை மணி நேரம் தூங்குபவர்களே. மதிய உணவுக்குப் பின்னர் தூங்கும் குழுவினர் 5 நிமிடத்தில் இருந்து அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை உறங்குகின்றனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.
நோய் எதிர்ப்பை ஒழுங்குபடுத்தும் தூக்கம்
பிற்பகல் தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது. அதேவேளையில் பிற்பகல் தூக்கம் 2 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டி செல்லக்கூடாது. தூக்கம் மட்டுமின்றி, சரியான வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவும் மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம் ஆகும். அதற்கு நீங்கள் சில உணவுப் பொருட்களை தினமும் சாப்பாட்டில் செய்துக் கொள்வது அவசியமாகும். அதாவது ஒமேகா 3 நிறைந்த கொழுப்பு மீன்கள், வெண்ணெய், நட்ஸ் வகைகள், பெர்ரி பழங்கள், அதிக அளவில் பச்சை காய்கறிகள், கீரைகள், அவித்த முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதோடு, மனதையும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருந்தால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.