கடந்த நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த வனிதா என்ற பெண் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றதால் வேண்டுதல் வைத்து நாக்கை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதுகுறித்து திமுக தலைவரான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி வனிதா என்ற தி.மு.க. தொண்டர் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியுள்ளதாக செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

மேலும், தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

ஆனால், நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காக சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி மனக்காயம் உண்டாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இது போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் புன்னகையில்தான் நமது அரசின் வெற்றி அடங்கியுள்ளது. வனிதா என்ற சகோதரி விரைவில் நலம்பெற்று இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

By ADMIN