பேர கேட்டாலே சும்மா நாக்கில எச்சில் ஊறுதில்ல, சாப்பிட்டா சாப்பிட்டிட்டே இருக்கணும் போல இருக்கு அப்படி என்று நாக்கில் சுவையை தாண்டவமாட வைக்கும் இனிப்பு கலைகளையும் கொண்டதுதாங்க இந்த ஜிலேபி.

எவ்வளவு சாப்பிட்டாலும் ஆசையே அடங்காது. மீண்டும் மீண்டும் ஆசையோடு சாப்பிட வைக்கும், நாவின் சுவை மொட்டுக்களை உயிர்ப்பிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஜிலேபி.

சர்க்கரை நோயில் ஊறியிருந்தாலும் கையில் கிடைத்தால் யாரும் பார்க்காத நேரத்தில் கொஞ்சம் சாப்பிடுவோம், அப்புறமா மாத்திரை போட்டு சமாளிச்சுக்கலாம் என நினைத்து திருட்டு சுவையை கூட்டி சர்க்கரை நோயாளிகளையும் விரதத்திலிருந்து நழுவ வைக்கும் இந்த ஜிலேபி.

1 கிலோ ஜிலேபியை ஒரே நேரத்தில் சுவைத்து முடித்த என் நண்பனையும் நான் பார்த்திருக்கிறேன் என பலரும் சொல்வதை கேட்டதுண்டு. இதெல்லாம் இல்லை, இன்னும் ஜிலேபியை பற்றி வரலாறோடு சேர்த்து சொல்லலாம்.

நம்முடைய பள்ளிகளில் குழந்தை பருவத்தில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது மிட்டாய் தருவார்கள். ஆனால் பலவருடங்களுக்கு முன்பு என்ன கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? ஜிலேபி கொடுத்து சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள்.
அவ்வளவு பெருமைமிக்க இந்திய தேசிய விழாவின் போது கொடுக்கபட்ட இந்த ஜிலேபி யார் உருவாக்கியது தெரியுமா? இந்த ஜிலேபியின் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜிலேபி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறு குழந்தைகள் முதல் சர்க்கரை நோய் உள்ள முதியோர் வரை ஜிலேபி என்றாலே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும்.

ஜிலேபி இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியா, மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு சில பகுதிகளிலும் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய இனிப்பு வகை.

பேச்சு வழக்கில் நாம் ஜிலேபி என சொல்லக்கூடிய நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த இனிப்பு பொருளை அதிகம் பேர் உச்சரிக்கும் பெயர் ஜலேபி. ஜிலேபி முதன் முதலில் தயாரிக்கப்பட்டது ஈரானில்.

அங்கு இதனுடைய பெயர் ஜிலேபாஸ். அங்கிருந்து அரேபியாவுக்கு சென்ற பொழுது அதற்கு ஜலேபியா என்ற பெயரை வைத்துள்ளனர். கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜிலேபி இந்தியாவுக்குக் இறக்குமதியானது.

வியாபார நோக்கில் இந்தியாவிற்கு வந்த பாரசீகர்கள் நமக்கு அளித்த மிகப்பெரிய இனிப்பு பரிசுதான் இந்த ஜிலேபி.

13 ஆம் நூற்றாண்டில் அந்தக் காலத்தின் அனைத்து உணவுகளையும் ‘கிதாப் அல்-தபீக்’ என்ற தலைப்பில் ஒரு சமையல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஜிலேபியானது மேற்கு ஆசியாவில் இருந்து வந்த ஒருவகை உணவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.

ஜிலேபி என்ற பெயரானது அரபு மொழிச் சொல்லான ஜூலாபியா (ZULABIYA) அல்லது பாரசீக மொழிச் சொல்லான சோல்பியா என்பதில் இருந்து பெறப்பட்டது என சொல்லப்படுகிறது.

மேற்கு ஆசியாவில் ஜிலேபியை ‘ஜில்பி’, ‘ஜெலாபி’, ‘ஜிலிப்பி’, ‘ஜிலாபிர்’, ‘ஜஹாங்கிரி’, மற்றும் ‘பக்’ போன்ற பெயர்களைக் கொண்ட இனிப்பு சுவை கொண்ட இந்த ஆரஞ்சு டிஷ் உலகளாவிய சுவையில் பெயர் பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் இதை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஜிலேபி எப்படி செய்வது என்பது குறித்த குறிப்பு 10ம் நூற்றாண்டு சமையல் நூல் ஜூலாபியா புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

13ம் நூற்றாண்டில் பல இனிப்பு சமையல் புத்தக குறிப்புக்கள் இருந்துள்ளன. அதில் முஹம்மது பின் ஹசன் அல் பாக்தாடி சமையல் நூலில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மக்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தி உள்ளனர்.

மேலும் 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டு, இந்த வட்ட வடிவ டிஷ் மைதா மாவு, ஏலக்காய் தூள் மற்றும் கேசரி பவுடர் ஆகியவை கலந்து தயாரித்துள்ளனர்.

மேற்கு ஆசியாவில் உள்ள கிருஸ்தவ தலங்களில் இது திஹோனி விருந்தில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் இலங்கப்பட்டையுடன் வழங்கப்படுகிறது.

ஈரானில் ஜிலேபியை சோல்பியா என சொல்லுவார்களாம். ரமலான் பண்டிகையின் போது பாரம்பரியமாக ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.

15ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஜிலேபியானது குண்டலிகா அல்லது ஜலவல்லிகா என அறியப்பட்டது. இந்த உணவானது மத்தியகால இந்தியாவுக்கு பாரசீக மொழி பேசும் துருக்கிய படையெடுப்பாளர்கள் கொண்டு வந்தனர்.

பொதுவாக இந்தியாவில் இதை அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை போன்ற அனைத்து வகை மாவால் தயாரிக்கப்படுகிறது.

கி பி 1600க்கு முந்தைய சமஸ்கிருத நூலான குன்யாகுநாதோபினி உணவுப்பொருட்கள் மற்றும் செய்முறை புத்தகம் இதை குறிப்பிடுகிறது. அதில் நவீன ஜிலேபியை தயாரிக்கும் முறை குறிப்பிட்டுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜிலேபியை இந்தூரில் ஜலேபா என சொல்கிறார்கள். இங்கு அதிக எடை கொண்ட ஜிலேபிகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்கப்படும் ஜலேபா 300 கிராம் எடையுள்ளதாக இருக்கும். இது இந்தூரில் உள்ள இரவு நேர கடைகளில் பிரபலமான உணவாக இருக்கிறது.

பன்னீரை சேர்த்து தயாரிக்கப்படும் பன்னீர் ஜிலேபி பங்களாதேஷ் மற்றும் ஒடிசாவின் கடற்கரையோர பகுதிகளில் மிகவும் பிரபலம். இந்த ஜிலேபியை 24 மணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

ஜிலேபியின் ஒருவகை மேற்குவங்காளத்தில் சனார் ஜிலிப்பி என அழைக்கப்படுகிறது. இந்த இனிப்பு வகை பங்காளி குலோப்ஜாமுன் எனவும் அழைக்கப்படுகிறது.

ஜிலேபி இலங்கையில் பானி வலாலு என அழைக்கப்படுகிறது. இங்கு இது உளுந்து, அரிசி மாவுடன், இனிப்பு சேர்த்து செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் எல்லா பண்டிகையிலும் சுவைக்கப்படும் ஒரு இனிப்பு வகை இந்த ஜிலேபி.

நம்முடைய இந்தியாவில் இனிப்புகளின் நகரமாக சொல்லப்படுவது கொல்கத்தா. ஆனால் ஜிலேபி என்றால் மிகவும் பிரபலம். டெல்லியில்தான். ஜிலேபி டெல்லியில் சிறிய சாலையோர கடைகள் முதல் மிகப்பெரிய சொகுசு உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கும்.கிபி 1450 ஆம் ஆண்டுகளில் ஒரு சமண எழுத்தாளரும் 17ஆம் நூற்றாண்டில் போஜனகுத்துஹாலா போன்ற இலக்கியங்களிலும் இந்த ஜிலேபி பற்றிய குறிப்புகள் உள்ளது.

500 வருடங்களில் ஜிலேபி பல ஊர்களில் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளது.

By ADMIN