வங்கியில் லோன் வாங்கும் வரையில், அது பெரிய வரம் போல கண்களுக்கு தெரிகிறது. ஒருமுறை வாங்கிவிட்டால், ஏன்டா வாங்கினோம் என்கிற மாதிரியான உணர்வு வந்துவிடும். அந்தக்காலத்தில் லோன் வாங்கி வீடு கட்டினாங்க, தொழில் செய்தாங்க என்றால், சரியான பொருளாதார பின்னணி இருந்தது. எப்படியும் தவணை கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், லோன் மாதிரி அகலக்கால் வைத்து ஏதாவது செய்துவிட்டால், அது கட்டி முடிப்பது வரைக்கும், ஒவ்வொரு பொழுதையும் பய உணர்வுடனே கடத்த வேண்டி இருக்கும்.

லோன் வாங்கி சொந்த வீடு கட்டி பயந்து பயந்து வாழ்வதற்கு, வாடகைவீட்டில் நிம்மதியாக இருந்துவிட்டுப்போகலாம். லோன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்த என்னுடைய நண்பனின் நிலையை பார்த்த பிறகே இதெல்லாம் பேசத்தோன்றுகிறது. இருபது இலட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்ட திட்டம் போட்ட என் நண்பனின் அப்பாவிடம், கையில் ஐந்து இலட்சம் மட்டுமே இருந்தது. மீதி 15 இலட்சமும் லோன். பூர்வீக வீட்டையும், அதனைச்சுற்றி இருந்த நிலத்தையும் அடமானம் வைத்து லோன் வாங்கினாங்க.

இடையில் நண்பனின் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து தவறிவிட, மொத்த பாரமும் அவன் தலையில் விழுந்தது. லோன் தவணை கட்ட முடியாமல், பூர்வீக சொத்து வங்கியால் ஏலத்திற்கு விடப்பட்டு, எங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவராலே அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொள்ளப்பட்டது. மதிப்பும் மரியாதையோடு எங்கள் ஊரில் வாழ்ந்த குடும்பம், மொத்த சொத்தையும் இழந்துவிட்டு, தலை குனிந்து செல்ல வேண்டி இருக்கு. இன்னும் அதில் இருந்து மீள முடியாமல் என் நண்பன் தவித்து வருகிறான்.

முன்னர் எல்லாம் லோன் வாங்கியவர் இறந்துவிட்டால், நாமினியாக போடப்பட்டவர்களிடம் இருந்தும், ஜாமீன் கையெழுத்து போட்டவரிடமிருந்தும் மீதி தொகை வசூலிக்கப்படும். தற்போது நடைமுறை மாறிவிட்டது. கடன் பெறும் அப்ளிகேன்ட் பெயரில் காப்பீடு செய்ய சொல்லி விடுகின்றார்கள். கடன் பெற்றவர் இறந்துவிட்டால், காப்பீட்டு தொகை நேரடியாக வங்கியில் கடன் தொகைக்கு ஈடாக சென்றுவிடுகின்றது. அது இல்லாவிடினும் கடனுக்கு ஈடாக வங்கி பெயரில் மாற்றிக் கொடுக்கும் சொத்தை ஏலத்தில் விட்டு வங்கி தன் கடன் தொகையை வசூல் செய்துவிடும். இதில் எல்லாவற்றிலும் சிக்கல் என்றால் இறுதியாக இறந்தவரின் வாரிசுகளிடமிருந்து கடன்தொகை வசூலிக்கப்படும். அவசரப்பட்டு கடன் வாங்கிவிட்டால், அது அடுத்த தலைமுறை வரைக்கும் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்

By ADMIN