உலகம் முழுவதுமே கொரோனா இரண்டாம் அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மிகவும் அதிக பாதிப்பை சந்தித்த இந்தியாவும் மெல்ல மெல்ல மீள்கிறது. இச்சூழலில் தென்னாப்பிரிக்கா, பிரிட்டனில் மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவில் அதிக சேதாரத்தை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வைரஸிலிருந்து உருமாற்றமடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வகை மூன்றாம் அலைக்குக் காரணமாக அமையலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறினார்.

அதேபோல மூன்றாம் அலை நிச்சயமாக வரும்; அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களில் இந்தியாவை தாக்கும் என எச்சரித்திருந்தார். வேண்டுமானால் கொரோனா தடுப்பு விதிமுறைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் அலை வருவதைத் தாமதப்படுத்தலாம் என்றும், வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மட்டும் பின்பற்றுவதில் எந்த பயனும் இல்லை என்று கூறிய அவர் அதை விட வைரஸ் உருமாற்றம் அடைவதைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்.

தற்போது இவரது கருத்தையே நிதி ஆயோக்கின் சுகாதாரத் துறை உறுப்பினர் விகே பால் வழிமொழிந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவது நாட்டு மக்களின் கைகளில் தான் உள்ளது. மிகத் தீவிரமாக கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ல வேண்டும். இவையிரண்டையும் செய்தாலே மூன்றாம் அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்த பெரும்பாலான நாடுகளில் இரண்டாம் அலை கூட வரவில்லை. எவ்வளவு வேகமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ, அதே வேகத்தில் நம்மால் சஜக வாழ்க்கைக்கு திரும்ப முடியும். நாம் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக முன்னேறும். எல்லாம் நம் கையில் தான் உள்ளன” என்றார்.

By ADMIN