ஊரடங்கால் மளிகை கடை திறந்த சினிமா இயக்குனர்

ரோனா ஊரடங்கினால் திரையுலகம் திரையுலகம் முடங்கி உள்ளதால், சினிமா இயக்குனர் ஆனந்த் என்பவர் மளிகை கடை திறந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் பட உலகம் முடங்கி 3 மாதங்களை நெருங்குகிறது. திரைத்துறையினர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஆனந்த் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை திறந்துள்ளார். இவர், ஒரு மழை நான்கு சாரல், மவுன மழை, பாரதிபுரம், நானும் ஒரு பேய்தான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கொரோனா ஊரங்குக்கு முன்பு துணிந்து செய் என்ற படத்தை இயக்கி வந்தார்.
மளிகை கடை திறந்துள்ள இயக்குனர் ஆனந்த் கூறும்போது, “கொரோனாவால் 3 மாதங்களாக சினிமா தொழில் இல்லை. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்று முடிவு எடுத்து நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகை கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன். கடைமுன்னால் விலைபட்டியல் போர்டும் வைத்து இருக்கிறேன்.
இந்த கொரோனா கஷ்டத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக இந்த தொழிலை செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கி வரும் துணிந்து செய் படவேலைகளை கவனிக்க மீண்டும் சினிமா தொழிலுக்கு சென்று விடுவேன். அப்போதும் இந்த கடையை மூடமாட்டேன். வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன்” என்றார்

Related News