கேட்கும் வரங்களை அளிக்கும் திண்டுக்கல் ”கோட்டை மாரியம்மன்”

திண்டுக்கல் மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும் அமைந்துள்ளது தனி சிறப்பு.  மிகவும் பழமையான கோட்டையாக  இன்றும் அழியாமல் உள்ளது திண்டுக்கல் கோட்டை. 


இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோவில் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளதாக கூறுகின்றனர். உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை,  திண்டுக்கல்லில்  கோட்டை மாரியம்மனாக  அருள்பாலித்து வருகிறார். சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது.  திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்புபடுத்தி நீண்ட வரலாறு கூறப்படுகிறது. 

கி.பி.1788-1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் போர் பயிற்சி செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வமாகவும் உள்ளது.  
இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது.  காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகின்றது. 8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்புடன் உடுக்கையும், சூலாயுதம்,  கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, மணிஆகியவைகள் காணப்படுகின்றன. இந்த அம்மனின் சிலை மற்ற தெய்வங்களின் சிலைகளைக் காட்டிலும் சற்று வித்தியாசப்பட்டது. இந்த சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும். 
குழந்தைகளுக்கு அம்மை  வந்துவிட்டால் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தீர்த்தம் வாங்கி சென்று குழந்தைகளுக்கு கொடுத்தால் அம்மை விலகிடும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்தக் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி வருகை தருவதை 10 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவில் காணலாம். விழாக்காலங்களில் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆகிய வாகனங்கள் அம்மன் காட்சி தருவார். மாசித்திருவிழாவில் நடைபெறும் பூச்சொரிதல் விழாவின் போது  பக்தர்கள் வழங்கும் மலர்களை கொண்டு அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருவிழா காலங்களில் அங்கப்பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்பட எண்ணற்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். 

னமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் நம்பிக்கையாக உள்ளது. சன்னதியின் உள்புற நூழைவாயிலில் தாமிரத்தால் கலந்து செய்யப்பட்ட கம்பத்தடி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம விநாயகர் கோவிலும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சாமிகோயில், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் மூனீஸ்வரசுவாமிசன்னதி, வடபுறம் கருப்பணசாமி சன்னதி உள்ளது. காளியம்மன் சிலை, துர்கை சிலை உள்ளது.  இப்படி பல தெய்வங்கள் ஒரு சேர உள்ள கோவில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் காணலாம். திருவிழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கின்றனர். 

Related News