பெண் மருத்துவரைத் தொடர்ந்து மேலும் ஒரு பெண் சடலம் கருகிய நிலையில் மீட்பு

ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே, மேலும் ஒரு பெண் சடலம் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாரி டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சித்தலாகுண்டா என்ற இடத்தில் இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பெண்ணுக்கு 30 முதல் 35 வயது இருக்கும். அவர் யார் என்பது தெரிய வில்லை. அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.
அநேகமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப்பெண் கையில் ஒரு பிளாஸ்டிக் பையில் பாட்டில் ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் அவர் அங்குள்ள கோவிலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்ததாக, நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். எனவே, அந்தப் பெண் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

Related News