2-வது டெஸ்டில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து..!!

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. அந்த அணி 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
301 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 75 ரன் தேவை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

மேலும் 17 ரன் எடுப்பதற்குள் அந்த அணி எஞ்சிய 3 விக்கெட்டையும் எளிதில் இழந்தது. இலங்கை அணி 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ரன் எடுத்தார். ஜேக் லீக் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது சோகமே. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்து இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.
இரு அணிகளும் மோதும் 3-ம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.

Related News