வினோத திருவிழா! பெரிய கம்புகளுடன் மோதிக் கொண்ட ஊர்மக்கள்.. 50 பேர் காயம்..

கர்னூல்: ஆந்திராவில் நடைபெற்ற விநோதமான பண்ணி திருவிழாவில் 50 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் தேவரகட்டு. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் பண்ணி எனும் திருவிழா நடைபெறும்.
அந்த கிராமத்தில் உள்ள மால மல்லேஸ்வர சுவாமி கோயிலில் தசரா பண்டிகையையொட்டி இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் மக்கள் கலந்துகொள்வர்.
பண்ணி திருவிழாவின் போது, கிராம மக்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒருவரைவொருவர் பெரிய பெரிய கம்புகளால் தாக்கிக்கொள்வர். ஊர்வலமாக எடுத்து வரப்படும் சாமி சிலையை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்காகவே இந்த சண்டை. யார் பக்கம் சாமி சிலைகள் வருகிறதோ அந்த ஊர் மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா பார்ப்பதற்கு ஒரு பெரிய கலவரம் போன்று காட்சியளிக்கும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் வழக்கம் போல் கிராம மக்கள் இரண்டு அணிகளாக பிரிந்து, பெரிய கம்புகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
கம்பு சண்டையில் ஈடுபட்ட 50 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 4 பேர் படுகாயம் அடைந்ததாக கர்னூல் மாவட்ட எஸ்.பி. பகீரப்பா காகிநெல்லி தெரிவித்தார். ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related News